திடீரென மூடப்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலை – ஊழியர்கள் பெரும் நெருக்கடியில்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது, 2,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) நீண்டகாலமாக ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனமான NEXT ஆடை உற்பத்தி தொழிற்சாலை நேற்றுமுதல் அதன் செயல்பாடுகளை காலவரையின்றி மூடியுள்ளது. இதனால் சுமார் 2,000 ஊழியர்கள் தமது தொழில் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.
1978 முதல் செயல்பட்டுவரும் இந்த தொழிற்சாலை, ஒரு பிரிட்டிஷ் முதலீட்டுத் திட்டமாகும். இந்த நிறுவனம் லண்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆடைகளை உற்பத்தி செய்கிறது.
தொழிற்சாலையின் வாயில்கள் பூட்டப்படுவதற்கு முன்பு எந்த முன்னறிவிப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக் கூறும் தொழிலாளர்கள் திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தால் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தின்படி, இலங்கையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால் நிறுவனத்தின் செயல்பாடுகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே தளத்தில் உள்ளனர். நிறுவனத்தில் பொறுப்பான அதிகாரிகள் யாரும் அந்த இடத்தில் இல்லை என்பதை பாதுகாப்பு ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது பாதிக்கப்பட்ட பணியாளர்களிடையே மேலும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் மூடல் ஊழியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எவ்வாறான முன்னறிவிப்பின்றிய தீரை்மானம் சவாலானது என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமை குறித்து குறித்த நிறுவனத்தின் நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.