நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத பேதமற்ற முறையில் சகல மக்களையும் நோக்குவதாக கூறுகின்றது. ஆனால் இவ்வருடம் பிரதேச செயலக வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
” நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை காணப்பட்டன. அது தற்போது 7 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்களாகும்.
ஆனால் நிதி ஒதுக்கீட்டை மையப்படுத்தி ஹங்குரான்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு பிரதேச செயலகங்கள் இருப்பதாக நிதி ஒதுக்கீட்டுக்காக காட்டப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் நுவரெலிய மாவட்டத்திற்கு இவ்வாண்டு 92 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஹங்குராங்கெத்த பிரதேச செயலக பிரிவுக்கு 25 மில்லியன், வலப்பனை பிரதேச செயலக பிரிவுக்கு 23 மில்லியன், கொத்மலை பிரதேச செயலக பிரிவுக்கு 18 மில்லியன், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு 6 மில்லியன், நோ ர்வூட் பிரதேச செயலக பிரிவுக்கு 7 மில்லியன், நுவரெலிய பிரதேச செயலகப் பிரிவுக்கு 7 மில்லியன், தலவாக்கல்லை பிரதேச செயலக பிரிவுக்கு 6 மில்லியன் என்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும், பாரபட்ச மற்ற முறையில் நடந்து கொள்வோம் என்று சொன்னாலும், அனைவரும் சமம் என்று முழங்கினாலும் அது மேடைகளுடனேயே மட்டுப்படுத்தப்பட்டும் என்பதற்கு நுவரெலிய மாவட்ட நிதி ஒதுக்கீடு ஒரு நல்ல உதாரணமாகும்.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அவர்களுக்காக பேரம் பேசுவதற்கும் மலையகத் தளத்திலிருந்து உருவாகி அவர்களை உண்மையாக நேசிக்கின்ற இன உணர்வுள்ள தமிழ் கட்சிகளுக்கே பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எமது மக்களை மதித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கக் கூடாது எதிர் பார்க்கவும் முடியாது. எமது இனத்தை சார்ந்தவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தி அதன் மூலம் பேரம் பேசும் ஆற்றலை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் நடந்ததும் அது தான். மலையக தமிழ் சமூகம் அரசியல் ஏமாளிகளாக இருந்து விடக்கூடாது. எம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். அதற்காக குள்ளநரி கூட்டுக்குள் நாம் அடைக்கலம் புகுந்து விட முடியாது.
எதிர் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தல். நமது சமூகத்தின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைய வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாகவாழுகின்ற சகல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டும். எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.