
காலி மாநகர சபை அமைதியின்மை: கைதான ஐவருக்கும் பிணை
காலி மாநகர சபையின் நகர செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு குற்றவியல் பலாத்காரம் புரிந்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.
குறித்த சந்தேகநபர்களான மாநகர சபை உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற மாநகர சபை அமர்வின் போது, நகர செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்த திசையை நோக்கி தண்ணீர் போத்தல்களால் தாக்குதல் நடத்திய விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கு முன்னர் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட முரண்பாட்டில், நகர செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தனர்.
அந்தச் சம்பவத்தின் போது, குற்றவியல் பலாத்காரம் புரிந்து அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அக்குழுவினரை காலி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி மாநகர சபையின் உறுப்பினர்களான ஜிலித் நிஷாந்த (ஐக்கிய தேசியக் கட்சி), நிமாலி சம்பிக்கா (பொதுஜன ஐக்கிய முன்னணி), பிரபாத் செனவிரத்ன (ஐக்கிய மக்கள் சக்தி), எம்.எம்.எம். யஸீர் (ஐக்கிய தேசியக் கட்சி), கபில கொஹொபான் (ஐக்கிய தேசியக் கட்சி) ஆகியோராவர்.
பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை தலா 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டார்.
