எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி வெடித்துச் சிதறியது – 77 பேர் உயிரிழப்பு

எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி வெடித்துச் சிதறியது – 77 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எரிபொருளை சேமிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் லொறி வெடித்துள்ளது. இதில் 77 உயிரிழந்துள்ளதுடன், மீட்பு பணியாளர்கள் உள்ளிட்ட 25 பேர் வரையில் காணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நைஜீரியாவில் எரிபொருள் லொறி வெடிப்புகள் மற்றும் விபத்துக்கள் பொதுவானவை ஆகும், பெரும்பாலும் சாலைகளின் மோசமான நிலை மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் காரணமாக இவ்வாறான விபத்துகள் ஏற்படுகின்றன.

சனிக்கிழமை நடந்த வெடிப்பில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் சமீபத்திய மாதங்களில் இதே போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, எண்ணெய் வளம் மிக்க டெல்டா மாநிலத்தில் எரிபொருள் லொரி வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் கடந்த ஒக்டோபரில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க முயன்றபோது ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 153 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபுவின் நீண்டகால எரிபொருள் மானியங்களை நீக்குவது உட்பட, அவரது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களில் எரிபொருள் விலைகள் 400 வீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளன.

இந்த மாற்றங்கள் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளதுடன், பலர் உயிர்வாழ்வதற்கான அவநம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் தனது கொள்கைகள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அறிவித்துள்ளது.

Share This