
கிளிநொச்சியில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் இன்று (12) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காருக்குள் இருந்த இருவரது சடலங்கள் பெரும் சிரமத்துக்கு பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர்.
மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
