தேசபந்து தென்னகோனை தேடி முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் வீட்டில் சோதனை

தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி மாத்தறை மொரவக்க பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (11) சோதனை நடத்தியுள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க, அவரது வீட்டைப் பரிசோதிக்க தம்மிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்குத் தாம் அனுமதி வழங்கியதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்யுமாறு அறிவித்து அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று(11) திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றின் முன்னாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டது.
எனினும் அவர் தலைமறைவாகியுள்ளதுடன் தமது கைது நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.