முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இருந்து அண்மையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை பாதுகாப்பு காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் அமைச்சரை கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பவும், பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்ததால், அவரை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.