முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று நீதிமன்றில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனை உறுதிப்படுத்தினார்.
2014ஆம் ஆண்டு பிங்கிரிய, நாரம்மல பகுதிகளில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 61 இலட்சத்து 46 ஆயிரத்து 110 ரூபாய் நிதியைப் பெற்று, அந்த நிதியை அதற்காகப் பயன்படுத்தாமல், அதை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதுடன், பொதுச் சொத்தின் கீழ் வரும் குற்றமாக இருப்பதால், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே , சந்தேகநபர்கள் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.