பரந்த கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய தென் மாகாண சபையின் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி , ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன பலய கட்சிக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் தென் மாகாண சபையின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் 20 தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் சகல சர்ச்சைகளையும் மறந்து பரந்த கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய தென் மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடவுள்ளதாக தென் மாகாண சபையின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.