
பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் கணவரின் கல்லறை அருகில் நல்லடக்கம்
மறைந்த பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் நேற்று அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வங்பங்களாதேஸின் தின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவரும் பங்களாதேஸ் தேசிய கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா, உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். கலீதா ஜியாவின் உடல், அவரது மகன் தாரிக் ரஹ்மானின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 11 மணியளவில் அவரது உடல் வாகனம் மூலம் டாக்காவில் உள்ள சன்சத் பவனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வங்பங்களாதேஸ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக டாக்காவின் சவுத் பிளாசா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கலீதா ஜியாவின் உடல் அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பிஎன்பி தொண்டர்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தெற்காசிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், நேபாள வெளியுறவு அமைச்சர் பால நந்தா ஷர்மா, பூடான் வெளியுறவு அமைச்சர் லியோன்போ துங்யெல், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், மாலைத்தீவு உயர்க்கல்வி அமைச்சர் அலி ஹைதர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
