வைத்திய சேவைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்ன சம்பவ இடத்திற்கு வருகைதந்த நிலையில், அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக வைத்தியசாலை நிர்வாகம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளது.
இதனையடுத்து குறித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரின் பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.