வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வர வேண்டியதில்லை

உயிரச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் சிறைச்சாலையில் இருந்தவாறு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பங்குபற்ற முடியும். அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இனி இலங்கைக்கு வருகைதர வேண்டிய அவசியமில்லை. தூதுவராலயத்தின் ஊடாக சாட்சியமளிக்க முடியும். குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை ( திருத்தச்) சட்டமூலம் ஊடாக இதற்கான வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டு மக்கள் நீதிமன்றத்துக்கு செல்ல விரும்புவதில்லை. சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் மாத்திரமே நீதிமன்றத்துக்கு செல்ல விரும்புகிறார்கள்.
அதுவும் அங்கு அவர்கள் தொழில் புரிவதால். சாட்சியாளர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல விரும்புவதில்லை. வழக்கு பிற்போடல் மற்றும் அலைகழித்தல் ஆகியவற்றால் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு பொதுமக்கள் விரும்புவதில்லை. நீதிமன்றங்களில் நேரம் வீண்விரயமாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நீதிமன்ற கட்டமைப்புக்குள் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்களுக்கு ஒரு அரசாங்கமோ, அந்த அரசாங்கத்தின் நீதியமைச்சர்களோ, பொறுப்புக்கூற வேண்டியதில்லை. bகாலம் காலமாகவே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே இவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உண்டு.
சிறைச்சாலைகளின் நெரிசலை வரையறுத்தல், வழக்கு விசாரணைகள் தாமதமாகுவதை தவிர்த்தல், ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், அதற்கான ஏற்பாடுகளை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது.
வழக்கு விசாரணைகள் தாமதமடைதல் மற்றும் வளங்கள் வீண்விரயமாதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதிமன்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் இந்த திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் தாமதமடைதல் மற்றும் நீதி கிடைப்பனவில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்ற கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கணிசமான அளவு தீர்வு காண முடியும்.
குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் வழக்குக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது வாதியும் இருக்க வேண்டும், பிரதிவாதியும் ,இருக்க வேண்டும்.
சந்தேக நபரும், சாட்சியாளரும் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். சாட்சிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்க வேண்டும். இவர்களில் எவரேனும் நீதிமன்றத்தக்கு சமூகமளிக்காவிடின் வழக்கு பிற்போடப்படும்.இதனால் அன்றைய தினம் வருகைத்தந்திருந்த ஏனையவர்கள் அனைவரும்ம் பாதிக்கப்படுவார்கள்.
இந்த பிரச்சனைக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணும் பொருட்டு இந்த திருத்தச் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் 144 ஆவது பிரிவில் ‘ நீதிமன்றத்தின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் ஆஜராகாமல், இணையம் வழிமுறையில் முன்னிலையாகலாம் ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் தொலைபேசிகள் உள்ளன. சந்தேக நபர்களையும், சாட்சியாளர்களையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் தொலைத்தொடர்பு இணையம் முறைமையின் ஊடாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளலாம்.
கொவிட் காலத்தில் உரிய ஏற்பாடுகள் இல்லாத நிலையிலும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிகழ்நிலை முறைமையில் இடம்பெற்றன. இன்று அந்த நடவடிக்கைகளுக்கு சட்ட அந்தஸ்த்து வழங்க தீர்மானித்துள்ளோம்.
நீதிமன்றத்துக்கு வருகைத் தராமல் விசாரணைகளில் பங்குப்பற்றுவதற்கு நீதிபதி அனுமதி வழங்கும் விதிமுறைகள் 144 ஆவது பிரிவின் 4 ஆவ உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவரேனும் சந்தேக நபர் அல்லது சாட்சியாளரின் உயிருக்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது. குற்றவாளி ஒருவரை நீதிமனற்த்துக்கு அழைத்து வரும் போது அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஏதும் ஏற்படுமாயின் அவ்வாறன சந்தர்ப்பத்தில் அவரை அழைக்க வேண்டிய தேவையில்iலை.
அத்துடன் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவரை அழைக்க வேண்டியதில்லை. சிறைச்சாலையில் இருந்தவாறு நிகழ்நிலை முறைமை ஊடாக விசாரணைகளில் பங்குப்பற்றலாம்.ஷ
அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் கொலை செய்யப்பட்டார்.எதிர்வரும் காலங்களில் அவதான நிலையில் உள்ளவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர வேண்டிய அவசியமில்லை.
இதற்கான சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலும், நீதிமன்றங்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வருகைத் தர வேண்டிய அவசியமில்லை. தான் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் அல்லது கொன்சியூலர் காரியாலயத்தின் ஊடாக நவீன தொழில்நுட்பம் ஊடாக விசாரணைகளில் பங்குப்பற்ற முடியும்.
இதற்கு முன்கூட்டியதாக சத்தியக் கூற்று ஊடாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.மக்களின் நலனை கருத்திற் கொண்டு தான் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.