ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது.
ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்க ஆரம்பித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்களையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது.
இந்தச் சூழலில், ஹவாயின் ஹனாலி பகுதியில் முதற்கட்டமாக 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பத் தொடங்கியுள்ளன. சுனாமி அலைகள் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுனாமி முன்னெச்சரிக்கையாக அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறைமுகங்களையும் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை எந்த கப்பல்களும் உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிட்வே அட்டோலில் 6 அடி உயர சுனாமி அலைகள் எழுந்ததாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் ஹவாயில், ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி குடியிருப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக உயரமான தரை அல்லது கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பேசிய அவர், “சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடற்கரையோரத்தில் தங்கவோ அல்லது சுனாமி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க தங்கள் உயிரைப் பணயம் வைக்கவோ கூடாது. இது ஒரு வழக்கமான அலை அல்ல. நீங்கள் சுனாமியால் தாக்கப்பட்டால் அது உண்மையில் உங்களைக் கொன்றுவிடும்.” என்றார்.
இதற்கிடையே சீனாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர பெரு, ஈகுவேடார் நாடுகளும் சுனாமி எச்சரிக்கை விடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.