மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான 60 ஆண்டுகால நட்பை வலுப்படுத்தி, தொடர்ந்து பேணுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றும் சிறப்பான பங்களிப்பிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.