
வடக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு
வடக்கு அவுஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த ‘Narelle’ சூறாவளி, தற்போது ‘தாழ்முக்க மண்டலமாக’ வலுவிழந்த போதிலும், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் பாரிய வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காலநிலை மண்டலம் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் எல்லைகளைக் கடந்து மேற்கு நோக்கி நகர்வதைத் தொடர்ந்து, டெலி ஆறு மற்றும் கேத்தரின் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, இந்தத் தாழ்முக்க மண்டலம் நாளை செவ்வாய்க்கிழமை இந்தியப் பெருங்கடலில் பிரவேசிக்கும் போது, மீண்டும் வலுவடைந்து புதன்கிழமை இரவு ‘அதிதீவிர சூறாவளியாக’ (Severe Cyclone) மாறக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக்கூடிய இந்த நரேல் சூறாவளி, வார இறுதியில் Perth நகர் உள்ளிட்ட தெற்குப் பகுதிகளைத் தாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணிக்கும் மிக அரிதான சூறாவளி இதுவென சி.எஸ்.ஐ.ஆர்.ஓ (CSIRO) நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதே இச்சூறாவளி மீண்டும் வலுப்பெறக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், மேற்கு அவுஸ்திரேலியக் கரையோர மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
