
விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் ஐவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (23) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹொங்கொங்கிலிருந்து ‘கதே பசிபிக்’ விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்களில் மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.
