
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
”இடர் முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக” நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போது தெரிவித்தார்.
இந்த உதவித் தொகையை வழங்குதற்காக 7.5 பில்லியன் ரூபா (750 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட 30 பில்லியன் ரூபாவில் இருந்து வழங்கப்படுவதாகவும் நிதியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
திறைசேரியால் பேணப்படும் நிதி முகாமைத்துவம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் வெற்றி என்பவற்றின் காரணமாக இந்த அதிகரிப்பை மேற்கொள்ள முடிந்ததாகவும் நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு நிதி வழங்குவதன் ஊடாக, பிரஜைகளின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது துரிதப்படுத்தப்படும் என்று செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான பொறிமுறை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தமது பிரதேச கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு இந்த நிதியைப் பெற முடியும் என்றும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலதிகமாக நிவாரணம் தேவைப்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பரிந்துரைகளின்படி நிதியை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
