ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் சிங்கள மொழிக்கு 140 ஆகவும், தமிழ் மொழிக்கு 134 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திற்கான சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 136 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 135 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 134 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 133 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 131 ஆகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிங்கள மொழி வெட்டுப்புள்ளி 127 ஆகவும், தமிழ் மொழி வெட்டுப்புள்ளி 132 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் சிங்கள மொழி மூல வெட்டுப்புள்ளி 127 ஆகவும், தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 131 ஆகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 132 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்றது, 308,026 பேர் பரீட்சைக்கு தோற்ற விண்ணப்பித்திருந்தனர்.

இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கு 303,670 மாணவர்கள் தோற்றியதாகவும், இதில் 51,969 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை கடந்துள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பார்வையிடமுடியும்

பரீட்சைத் தேர்வர்களின் சரியான சுட்டெண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பார்வையிடமுடியும்.

மேலும் பரீட்சை முடிவுத் தாளைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட நகலைப் பெறுவதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Share This