பெண் வைத்தியர் விவகாரம்; சந்தேகநபரின் சகோதரி கைது

பெண் வைத்தியர் விவகாரம்; சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) இரவு கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ததன் பின்னர் சந்தேகநபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கல்னேவ பொலிஸார் மற்றும் அநுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, ​​கல்னேவ பிரதேசத்தில் உள்ள காட்டில் மறைந்திருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், தற்போது அவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் காவலில் உள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட வைத்தியரை மிரட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இருப்பினும், சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேகநபர் எடுத்துச் சென்ற கையடக்க தொலைபேசியை பொலிஸார் இன்னும் மீட்டெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This