கொழும்பில் பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் – நிதியின்மையால் மூடப்படும் அபாயம்
சுமார் நான்கு மாதங்களாக இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமையால் ஏற்கனவே தோண்டப்பட்ட மனித எலும்புகள் சேற்று நீரில் மூழ்கியுள்ளமையை மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆரம்பத்தை அவதானிப்பதற்காக அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு தெரியவந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்டு 2025 ஜனவரி 27 ஆம் திகதி மூன்றாவது முறையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக மனித புதைகுழியை அண்டிய பகுதியில் ஏற்கனவே குறைந்தது மூன்று மனித எலும்புக்கூடுகள் அனழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. ஜனவரி 30ஆம் திகதி புதிதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று மனித எலும்புக்கூடுகள் மண்ணின் மேற்பரப்பை அகற்றி கண்டுபிடிக்கப்பட்டதோடு ஜனவரி 31 வெள்ளிக்கிழமைக்குள் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
அகழ்வு பணிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு கிடைக்காவிடின் அடுத்த சில தினங்களில் குழியை மூட வேண்டிய நிலை கூட ஏற்படுமென, அன்றைய தினம் (ஜனவரி 31) முதல் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதைகுழி தோண்டும் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர்களுள் ஒருவரான தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
“இவ்வாறு எங்களால் வேலை செய்ய முடியாதல்லவா?, இலங்கையில் பாரிய மனித புதைகுழிகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு கொள்கை வேண்டும். இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்காமல் விரைவாக அறிந்து தீர்வு காண வேண்டுமென நீதி அமைச்சின் பிரதானிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.”
அகழ்வு பணிகள் உரிய முறையில் தொடர அனுமதிக்கப்படாத காரணத்தினால் விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட தடயவியல் நிபுணர், பொறுப்பான அதிகாரிகளின் அலட்சியத்தால் குழியை மூட நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்தார்.
மனித புதைகுழிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாததும் ஆய்வினை மேற்கொள்வதற்கு தடையாக உள்ளது.
புதைகுழி அமைந்துள்ள நிலத்தின் தன்மை மற்றும் புதைகுழியின் நெரிசலான நிலை காரணமாக ஏற்கனவே பல்வேறு கழிவுகள் மற்றும் கழிவுநீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கும் பேராசிரியர் ராஜ் சோமதேவ அந்த நிலைமை நேரடியாக அகழ்வுப் பணிகளை பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“பட்ஜெட் போட்டவுடனே ஓ.எம்.பி.யும், நீதியமைச்சரும் அதிகம் என சொல்கின்றனர். அகழ்வு பணிக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட தொகையில் பாதியையே கேட்கிறேன். குழி குப்பை வடிகாலில் தண்ணீரால் நிரம்பியுள்ளது. வீதியில் ஓடும் தண்ணீரும் இதில் விழுகிறது. இதை இப்படியே முன்னெடுத்தால் அகழ்வாராய்ச்சிக்கு என்ன நடக்கும் என்று இவர்களுக்குப் புரியவில்லையா?
கொழும்பு துறைமுகத்தில் உள்ள மனித புதைகுழியை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் கூடாரமொன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், 2025 ஜனவரி 30 வியாழன் முதல் அது முறையான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக பாரிய மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் எட்டு நாட்களின் பின்னர் செப்டெம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன, மேலும் நான்கு மண்டை ஓடுகள் குழியில் காணப்பட்டன.
செப்டெம்பர் 26ஆம் திகதி வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமானபோது, மாலையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் உள்ளே அதிக மனித எலும்புகள் இருப்பதை அவதானித்தனர்.
ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.