
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொலை செய்த டெட்சுயா யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாரா நகர நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதிபதி ஷினிச்சி தனகா இந்த தீர்ப்பை வழங்கினார்.
2022 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது அபேவை சுட்டுக் கொன்றதாக 45 வயதான யமகாமி ஒப்புக்கொண்டார்.
துப்பாக்கி வன்முறை மிகவும் அரிதான ஜப்பானில் இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யமகாமி, யூனிஃபிகேஷன் சர்ச் என்ற மத அமைப்பின் மீது இருந்த கோபத்தின் காரணமாக அபேவை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அபே அந்த அமைப்புடன் தொடர்புடைய நிகழ்விற்கு காணொளி செய்தி அனுப்பியதே தனது கோபத்திற்குக் காரணம் என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை, ஜப்பானின் ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் யூனிஃபிகேஷன் சர்ச் இடையேயான தொடர்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், பல சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அபே இரண்டு காலகட்டங்களில் மொத்தம் 3,188 நாட்கள் பிரதமராக பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டு உடல்நலக் காரணங்களால் பதவி விலகினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த உலகத் தலைவர்களில் அபேயும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
