ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் – இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் – இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் 14வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி மகளிர் அணிகள் மோதின. இதில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்க தகுதிப் பெற்றுள்ளது. போட்டியின் 33வது நிமிடத்தில் இத்தாலி சார்பில் பார்பரா போனான்சியா கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும், போட்டி முடியும் தருவாயில் 96வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை மிச்செல் அகேமாங் பதில் கோல் அடித்து சமன் செய்தார். இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருந்தது.

கூடுதல் நேரத்தில் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரம் காட்டின. இதில் இங்கிலாந்து அணி சார்பில் 119வது நிமிடத்தில் சோலி கெல்லி கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டம் முடியும் போது இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்றிருந்ததுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றது.

இதேவேளை, இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனி மற்றம் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This