“இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும்

“இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும்

-அ.நிக்ஸன்

இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் – எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு என்பது அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளின் பிரதான கடமை.

செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு பற்றிய செயற்பாடுகளின் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ”பயங்கரவாத செயற்பாடுகள்” – ”பாசிசம்” என்ற கோசங்கள் மீண்டும் சிங்கள ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன.

இன அழிப்பு என்பதை கனடாவின் பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும், கனேடிய அரசு என்ற கட்டமைப்பின் இலங்கை பற்றிய வெளியுறவுக் கொள்கையில், தமிழ் இன அழிப்பு என்ற விவகாரம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் நோக்கில் வெறுமனெ பேச்சு மாத்திரம் தான் விஞ்சியுள்ளன.

ஆனாலும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதனை செப்பனிடும் அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலரும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

இந்த இடத்திலேதான் சில புரிதல்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

–இன அழிப்பு என்றால் என்ன?–

இன அழிப்பு (Genocide) என்பது ஓர் இனத்தையும் அந்த இனத்தின் மரபுரிமைகள் – வரலாறுகள் போன்றவற்றை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்தலைக் குறிக்கும். குறித்த இன மக்களை திட்டமிட்டு கொலை செய்வது மாத்திரம் இன அழிப்பு என்று வரையறை செய்ய முடியாது.

குறிப்பாக, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இன அழிப்பு என்று பொருள் கொள்ள முடியும்.

முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கம் இன அழிப்பு என்ற விவகாரத்தையும் மனித உரிமை மீறல் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதையும் உரிய முறையில் வகுக்கத் தவறிய பின்னணியில்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது,

இந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச சங்கத்துக்குப் பதிலாகவே இது உருவானது.

The German army marches into Poland, September 1939.

இந்த ஐ.நா சபை இன அழிப்பு என்பதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றவியல் குற்றம் என வரையறை செய்து அறிவித்தது.

இதன்படி ஓர் இன மக்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொலை செய்ய நினைப்பது அல்லது இனம் இல்லாமல் செய்வது, இன அழிப்பு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதானமாக இன வேறுபாட்டை மையப்படுத்தி குழந்தைப் பிறப்பை தடுத்தல், மக்களை இடம்பெயரச் செய்தல் வேறு எவ்வகையிலேனும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இன அழிப்பு குற்றங்களாக நோக்கப்படும். இது சர்வதேச தடைச் சட்டத்தின்படி குற்றச் செயலாகும்.

—சட்டத்தரணியின் விளக்கம்—

பெலரஸ் (Belarus) நாட்டவரான சட்டத்தரணி ரபேல் லேம்கின்(Raphael Lemkin) 1944 ஆம் ஆண்டு எழுதிய “Axis Rule in Occupied Europe” என்ற தனது புத்தகத்தில் இன அழிப்பு என்பதை பயன்படுத்தியுள்ளார்.

1933 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது சர்வதேச தண்டனைச் சட்ட ஒருங்கிணைப்பு நாடுகள் மாநாட்டில் (League of Nations) அவர் ஆற்றிய உரையில், இன, மத மற்றும் இன குழுக்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் முன் மொழிந்திருந்தார்.

காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) சர்வதேச சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ரபேல் லேம்கின் ஆரம்பத்தில் எழுதியிருந்தார். இக் கருத்து பின்னர் இன அழிப்பு என பெயரிடப்பட்டு சர்வதேசத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது.

இப் பின்புலத்தோடுதான் ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என்பதை ஏற்று அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது.

இந்த இடத்தில் அரச பயங்கரவாதம் என ஒன்றும் வரையறை செய்யப்படுகிறது.

அரச பயங்கரவாதம் (State terrorism) என்பது ஒரு அரசாங்கம் தமது நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் மீது கட்டவிழ்த்து விடும் ஆக்கிரமிப்புகள் – இராணுவ தாக்குதல்கள் போன்றவற்றைக் குறிக்கும். தமது சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் செயல்களையும் அரச பயங்கரவாதம் என்ற சொல் குறித்து நிற்கும்.

ஐ.நா சட்ட விதிகள் – ஒழுங்குகளை கடைப்பிடிக்கத் தவறும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் அரச பயங்கரவாதம் என பொருள் கொள்ள முடியும். அதாவது, ஒரு அரசாங்கம் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது அரச பயங்கரவாதம் என வகை செய்ய முடியும்.

குறிப்பாக போர் குற்றம், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் வன்முறை, சித்திரவதை, நியாமற்ற கைதும் தடுப்பும், பலாத்காரமாக காணாமல் ஆக்கப்படுதல், தடுத்து வைத்தல் · சட்டத்துக்கு மாறான கொலைகள், அடிமைத்தனம், சாதி சமய பாகுபாடு, மாற்று இன பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட குடியேற்றம், இன கருவறுப்பு, பண்பாட்டுச் சீரழிவுகள் போன்றவை அரச பயங்கரவாதமாகும்.

இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்கப்படுகின்ற இனத்தின் இளைஞர்கள், தமது இனத்தின் ”அரசியல் விடுதலை” என்பதை மாத்திரம் முன்நிறுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை பயங்கரவாத செயற்பாடாக பார்க்க முடியாது.

உலகில் விடுதலை இயக்கங்கள் – பயங்கரவாத அமைப்புகள் என இரண்டு வகை உண்டு. விடுதலை இயக்கங்கள் தாம் வாழ்கின்ற நாட்டின் இராணுவத்திற்கு எதிராக அதாவது முப்படைகளையும் இயக்கும் அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும்.

அந்தப் போராட்டத்தை பயங்கரவாதம் என வரையறை செய்ய முடியாது.

ஆனால், இலங்கை போன்ற நாடுகள் அப் போராட்டங்களை பயங்கரவாதமாக சர்வதேச அரங்கில் சித்தரித்து வருகின்றன.

–சர்வதே சட்டங்கள் சொல்வதென்ன?—

ஆனால், 2012 இல் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களின் இரண்டாம் பதிப்பு (Hand books of international law) உள்ளடக்கங்கள், எது பயங்கரவாதம் என்பதை பொருள் கோடல் செய்கின்றன. குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை ஓர் அரசு மீறும் பட்சத்தில் அது பயங்கரவாதம் என்ற தொனியை சர்வதேச சட்டங்கள் வியாக்கியானம் செய்கின்றன.

லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகம் (Cambridge University Press) 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப் பதிப்பை செய்திருக்கிறது. பொதுவாக சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் என்பதில் வேறுபாடுகள் இருக்காது. ஐ.நா நியமங்களைக் கூட ஓர் அரசு மீறினால் அது பயங்கரவாதமாகவே நோக்கப்பட வேண்டும்.

அதேநேரம், சர்வதேச சட்டம் என்றால் என்ன என்பது பற்றி சட்ட அறிஞர்கள் பலரும் பல்வேறு விதமாக கற்பிதம் செய்கிறார்கள். சாதாரண வழக்கிலும் சட்டம் என்பது பல வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. சர்வதேச சட்டத்தின் இயல்புகளை விவாதிக்க முற்பட்டால், முதலில் எதிர்கொள்ள வேண்டிய வினா சர்வதேசச் சட்டம் உண்மையில் ஒரு சட்டமா? என்பதாகவே எழும்.

இலங்கை போன்று உள்நாட்டு இன மோதல் இடம்பெறும் நாடுகள் குறிப்பாக அரசுகள்,. உள்நாட்டு சட்ட அமைப்பு முறையின் (Domestic legal system) பிரகாரம் அந்த இன மோதலுக்குரிய அரசியல் தீர்வை கொண்டு வர முற்படும். உள்நாட்டு நீதிமன்றங்கள் ஊடாகவே அனைத்துக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளையும் நடத்த விரும்பும்.

ஈழத்தமிழர்கள் போன்று பாதிக்கப்பட்ட அரசு அற்ற இனம் ஒன்று சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிகள் அதற்கு இடம் கொடுக்காது.

குறிப்பாக சர்வதேச நீதி என்பது புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களின் பிரகாரமே அமைந்துள்ளது எனலாம்.

இந்த இடத்திலேதான், ஐ.நா வின் சில நியமங்கள் தொடர்பாகவும் அதன் கீழ் செயல்படும் ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றியும் கேள்விகள் சந்தேகங்கள் எழுகின்றன.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு (United Nations Commission on Human Rights) என்றுதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஜெனீவாவில் இயங்கிய அந்த ஆணைக்குழு ஒழுங்கு முறையில் செயற்படவில்லை.

இதன் காரணத்தால், 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜெனிவா மனித உரிமை சபையை (The United Nations Human Rights Council) ஐ.நா உருவாக்கியது.

—பேராயர் டெஸ்மன்ட் —-

ஜெனிவாவில் இயங்கும் இந்த மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு உறுப்புரிமை வழங்கக் கூடாது என்று தென் ஆபிரிக்க பேராயர் அமரர் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் இன அழிப்பு நடவடிக்கைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதால் புதிதாக உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வழங்க வேண்டாம் என்று ஐ.நா.வுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தார்.

ஆனாலும், இலங்கை உறுப்பு நாடாக இணைந்து கொண்டது. இருந்தாலும், ஐசிசிபிஆர் எனப்படும் சர்வதேச சமவாயம் (International Covenant on Civil and Political Rights – ICCPR) எனப்படும் பிரதான நியமம் ஒன்றை இலங்கை சட்டமாக்க வேண்டும் என ஐ.நா வற்புறுத்தியது.

இதன் காரணமாக சர்வதேச சமவாயத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச 2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 56 ஆம் இலக்க சாதாரண சட்டமாக அமுல்படுத்தினார்.

–ஐசிசிபிஆர் சமவாயம்——

ஆனால் அந்தச் சமவாயத்தில் உள்ள பிரதான நியமங்கள் இலங்கைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக சுயநிர்ணய உரிமை என்ற வாசகம் அகற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என அப்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் பொருள்கோடல் செய்தார்.

இதன் காரணமாக ஐசிசிபிஆா் என்ற சமவாயத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இலங்கைச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பேராசிரியரின் அந்த விளக்கம் ஒரு வகையில் நியாயமானது. ஏனெனில், ஐநா சமவாயத்தில் ஒரு நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்ற கற்பிதம் ஐசிசிபிஆர் என்ற அந்த சமவாயத்தின் சரம் 1 என்ற பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. இது குழப்பமானது தான். இதன் ஆங்கில வடிவம் வருமாறு- (Article 1 All peoples have the right of self-determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development.)

ஆகவே, ஐ.நாவின் இந்தத் தவறை தமக்குச் சாதமாகக்கியே ஐசிசிபிஆா் எனப்படும் சமவாயத்தை இலங்கை சட்டம் ஆக்கியிருக்கிறது. இது பற்றி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதல் உரையின் போது கேள்வி தொடுத்திருந்தார்.

ஆகவே, புவிசார் அரசியல் – பொருளாதார இலாப நோக்கில் ஐ.நா நியமங்களும் சர்வதேச் சட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், அரசு அற்ற ஓர் இனம் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எந்த வகையான அணுகு முறைகளை பின்பற்ற முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.

மனித உரிமைகள் ஆணைக்குழு ஒழுங்காக செயற்படவில்லை என்பதால், 2006 இல் மனித உரிமைச் சபை உருவாக்கப்பட்டு இன்று 47 நாடுகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்படுவது ஏன்?

மனித உரிமைச் சபையின் ஆணையாளர் வோல்க்கர் டர்க் (Volker Türk) கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்தபோது, யாழ் செம்மணிக்கும் சென்று போர்க்கால மனித புதைகுழிகளை பார்வையிட்டிருந்தார்.

ஆனால், இலங்கை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ள முன்னோடி அறிக்கையில் அது பற்றி பிரஸ்தாபித்திருந்தாரா? இன அழிப்பு நடந்தாக குறிப்பிட்டு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதம் பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை அந்த அறிக்கையில் இருந்ததா?

கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தீர்மானங்களில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்டிருந்த கடுமையான நிலைப்பாடுகள் பற்றியேனும் ஆணையாளரின் அந்த முன்னோடி அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தா?

ஆகவே, இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அதன் ஊடான அரசியல் – பொருளாதார லாபங்களை கணக்கிட்டு ஆணையாளர் முன்னோடி அறிக்கையை தயாரித்திருக்கிறார் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாகத் தெரிகிறது.

2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னணியில், மீண்டும் உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஆணையாளர் பரிந்துரைத்தமை எந்த அடிப்படையில்?

—தீர்மானங்களை நிராகரித்த பின்னணிகள்—

ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.

2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தை முற்றாகவே நிராகரித்திருந்தார்.

அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.

புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனீவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில், இன அழிப்பு என்று தமிழர்கள் கோருகின்ற விடயம் முற்றாகவே கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஒப்பாசாரத்துக்குக் கூட அது பற்றிய வார்த்தைகளே இல்லை.

கடந்த ஆண்டுகளில் வெறுமனே போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மதிப்பட்டிருந்த அந்த விடயங்களை கூட உரிய முறையில் கவனத்தில் எடுக்காமல் வெறுமனே உள்ளக விசாரணை எனவும், இலங்கை மீது நம்பிக்கை வைப்பதாகவும் 2025 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது பற்றிய பின்னணி என்ன?

ஆகவே, தொடர்ச்சியான முறையில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஐ.நா நியமங்களையும் மனித உரிமைச் சபையின் தீர்மானங்களையும் புறக்கணித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் ஐ.நா, இலங்கை மீது நம்பிக்கை வைக்கிறது?

எதற்காக ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது?

2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஈழத் தமிழர்களுக்கு ஒழுங்கான அரசியல் தலைமை இல்லை என்பது வேறு. ஒருமித்த குரல் செயற்பாடுகள் இல்லை என்பதும் வேறு.

ஆனால் அவற்றைக் காரணம் காண்பித்து 2012 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் இலங்கை செயற்படுத்தவில்லை என்பதை ஏன் மனித உரிமைச் சபை கவனத்தில் எடுக்கவில்லை?

2010 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, தமது அறிக்கையில், சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த விவகாரங்கள் பற்றி ஏன் கவனத்தில் எடுக்கப்படவில்லை?

ஆகவே, அமெரிக்க – இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை மையப்படுத்தி ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மேற்கு – ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன என்பதும், அதற்கு ஐ.நா கட்டமைப்பு ஒத்துழைக்கிறது என்பதும் இங்கே பகிரங்கமாகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் முறைமைகளுக்குள் முடங்கி இருக்கின்றமையும் இதற்குப் பிரதான காரண – காரியமாகும்.

–பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலகம்—–

ஆனாலும்,ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்காது என்றில்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் அனைத்தும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை இலங்கை எவ்வாறு தமக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்துகிறதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையில், அரசு அற்ற இனமாக வேறு நாடுகளுடன் தமிழ்த்தரப்பு உறவை பேண வேண்டும்.

பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலக ஒழுங்கில் சிறிய நாடு ஒன்றுடன் அல்லது சீனா போன்ற வல்லரசுகளுடன் ஏதோ வழியில் உறவை பேணக்கூடிய வழி வகைகள் இல்லாமலில்லை.

அவ்வாறு அணுகும்போது இலங்கை ஒரு சிறிய அதுவும் பொருளாதார பலவீனம் உள்ள நாடு என்ற அடிப்படையில் நிச்சயமாக ஈழத்தமிழர் விவகாரங்களில் விரும்பியோ விரும்பாமலோ கீழ் இறங்கி வர வேண்டிய கட்டாயச் சூழல் எழும்.

இலங்கையை தாங்கிப் பிடிக்கும் அமெரிக்க – இந்திய அரசுகள் கூட படி இறங்க வேண்டிய பின்னணி உருவாகும். ஆனால்,இந்த இராஜதந்திரம் என்பது ஈழத்தமிழ்த் தரப்பிடம் இன்று வரையும் இருப்பதாக இல்லை.

சிங்களத் தலைவர்கள் காலத்துக்கு காலம் அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குறிப்பாக போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அமெரிக்க – இந்திய அரசுகள் தம்மை நோக்கி படி இறங்கி வரக்கூடிய அணுகுமுறைகள் – விட்டுக் கொடுப்புகள் போன்ற இராஜதந்திரங்களை பல சந்தர்ப்பங்களில் பேணியிருந்தனர்.

விமர்சனங்கள் – குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் 1983 இல் அமிர்தலிங்கம் அவ்வாறான அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் எந்த ஒரு தமிழ்த் தலைவர்களும் அவ்வாறு அணுகவில்லை. அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகள் அவ்வாறான அணுகுமுறைகளை ஜனநாயக வழியில் கையாளக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

அத்துடன், இன அழிப்பை ஆதாரப்படுத்தும் ஆவணங்களைக் கூட ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், தேர்தல் வியூகங்கள் மாத்திரமே தமிழ் தேசிய கட்சிகளினால் வகுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் இலக்குகளும் விஞ்சியுள்ளன.

இப் பலவீனங்களை சாதகமாக்கி விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குச் சாதகமான அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலா் மீண்டும் சர்ச்சையை கிளப்புகின்றனர். “இீன அழிப்புக்கான சர்வதேச நீதி என்பது மேலெழந்து விடக்கூடாது என்பதை பிரதானப்படுத்தியே அவ்வாறான விமர்சனங்கள் மீண்டும் எழுகின்றன.

குறிப்பாக செம்மணி புதைகுழி விவகாரத்துக்குப் பின்னரான சூழலில் புலிகள் பற்றிய இவ்வாறான விமர்சனங்கள் சிங்களத் தரப்பில் எழுவதை அவதானிக்க முடிகிறது.

பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன Sri Lanka. Sri Lanka Military Academy Journal என்ற சஞ்சிகையில் எழுதி வருகிறார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் எழுதியுள்ளார்.

ஆகவே,தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டையும், போராட்டங்கள் பற்றிய சம்பவங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதுடன் நியாயப்படுத்தல் போன்ற செயல் முறைகளிலும் தமிழ்த்தரப்பு ஈடுபட வேண்டும்.

குறிப்பாக முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போது ஏற்பட்ட விளைவுகள் மாத்திரமல்ல, ஆயுதப் போராட்டதுக்கு முந்திய அதாவது, 1949 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா குடியேற்றத் திட்டம் மற்றும் அதற்கு எதிராக 1956 இல் நடந்த போராட்டத்தின் போது இடம்பெற்ற திட்டமிடப்பட்ட படுகொலைகள் போன்றவற்றில் இருந்து இன்றைய செம்மணி புதைகுழி வரையும் ஆவணப்படுத்தல் அவசியமாகிறது.

அதேநேரம்,2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என அழைக்கப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் சிங்கள பௌத்த வரலாறுகள் – சிங்கள மொழித் திணிப்புகள் தமிழ் வரலாற்று பாடநூல்களில் புகுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

ஐ.நா யுனெஸ்கோ கல்வி நியமங்கள் அடிப்படையில், பாடநூல்கள் குறிப்பாக ஓர் இனத்தின் வரலாற்றை திரிபுபடுத்தி மொழிபெயர்ப்பு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆகவே, இவ்வாறான ஆவணப்படுத்தல்கள் – இன அழிப்பு பற்றிய ஆதாரங்கள் நியாயப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற பிரதான நோக்கில் விடுதலைப் புலிகளை பாசிசம் – பயங்கரவாதம் என்று சித்தரிப்பதும் வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பபாணத்தில் சாதி ஒடுக்குமுறை இருப்பதாகவும் மிகைப்படுத்தி “அரசியல் விடுலை“ பற்றிய சிந்தனை இளைஞர்கள் மத்தியில் இருந்து மடைமாற்றம் செய்யப்படுகிறது.

இக் கட்டுரையில் பயங்கரவாதம் – பயங்கரவாத செயற்பாடுகள் என்பது அரசு என்ற கட்டமைப்பை நோக்கியதாகவே இருக்கும் என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று பாசிசம் என்பதும் அவ்வாறுதான்

–பாசிசம் பற்றிய புரிதல்—-

“பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்” (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார்.

இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தன. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை.

ஆகவே, ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் படுகொலைகள் – “மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க மறுக்கும் தன்மை இருப்பதால் மாத்திரம், அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார்.

இத்தாலியில் இருந்த பாசிசத்தில் கோர்ப்பரேட்டிசம் (Cooperativism) எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம், அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் இவர் வாதிடுகிறார்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார்.

ஓர் அரசானது அரசற்ற இனம் ஒன்றின் அரசியல் விடுதலை பற்றிய நியாயங்களை திட்டமிட்டு ஒதுக்குவது, கொலை செய்வது, அந்த இனத்தின் கருத்துக்களை முடக்குவது அவர்களிடையே பிரிவினைகளை திட்டமிட்டு உருவாக்குவதும் பாசிசம் என்ற வரையறைக்குள் உள்ளடங்கும் என்றும் கெவின் பாஸ்மோர் கற்பிதம் செய்கிறார்.

ஆகவே,2009 இற்குப் பின்னரும் சிங்கள ஆய்வாளர்கள் சிலர் புலிகளை பாசிட்டுகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் திட்டமிட்டு பரப்புரை செய்வதன் பின்னணி என்பது, இன அழிப்புக்கான சர்வதேச நீதி மேலெழுந்து விடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டுள்ளது எனலாம்.

மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் ஒருவர். “இந்திய தேசியத்திற்கும் நாஜி – பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு” (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஓர் ஆய்வு நூலை 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார்.

அந்த ஆய்வு நூல் அரசு என்ற கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஓர் அரசாங்கம் மற்றும் விடுதலை இயக்கங்கள் எவ்வாறு செயற்படும் என்ற வியாக்கியானத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆகவே,2009 இற்குப் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை கோருவதற்கு உரித்துடைய தமிழ்த் தரப்பு, முதலில் “ஆவணப்படுத்தல்“ – “நியாயப்படுத்தல்” என்ற இரண்டு பிரதான காரியங்களிலும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழல் நிலைமைகளுக்குள் விழுந்துவிடாமல், ஐ.நா நியமங்கள் – சர்வதேச சட்டங்கள் என்ற இரண்டு வழிமுறைகள் ஊடாக பயணிக்க வேண்டியதும், பாதிக்கப்பட்ட தரப்பாக தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியதும் பிரதான கடமை ஆகும்.

Share This