
உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஸ்தாபியுங்கள்
அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம்மனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நமது நாட்டிற்கு தேசிய மற்றும் மத ஒற்றுமை முக்கியமானதாக அமைந்து காணப்படுகின்றன. அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தை போஷித்து வருவது போலவே பிற மதங்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பும், உரிய ஸ்தானமும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இது இவ்வாறு நடக்கும் பட்சத்தில் மத ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் மேலோங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சங்கைக்குரிய பேராசிரியர் பல்லேகந்த ரத்தினசார மகாநாயக்க தேரருக்கு இலங்கை அமரபுர மகா பீடத்தின் வஜிரவங்ச பிரிவின் மகாநாயக்கர் பதவிக்கான ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு சூழ்நிலைகளில் எழும் சவால்களை எதிர்கொள்வதற்கும் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை ஜனாதிபதி தலைமையில் ஸ்தாபித்து, சர்வ மதத் தலைவர்கள் மற்றும் சர்வ கட்சி பிரதிநிதிகள் பங்கேற்புடன் இதனை முன்னெடுக்க வேண்டும்.
ஜனநாயக சமூகத்தில் மதத்தையும் இனத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது குறுகிய மனப்பான்மை கொண்ட நடவடிக்கையாக அமையும்.
குறுகிய கால பிரபலத்திற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நெருக்கடிகளை பிரச்சினைகளை உருவாக்கி, தூண்டி விட்டு நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விடுக்கப்படுவதனால், இந்த சவால்களை வெற்றி கொண்டு ஒற்றுமை சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய பல்வேறு போக்குகள் காரணமாக, பௌத்தத்திற்கு சவால்கள் காணப்படுகின்றன. பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் ஊடாக பௌத்தத்தை பல்வேறு வழிகளிலும் திரிவு படுத்தி அதன் உண்மையான போதனைகளை மழுங்கடிக்கச் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். குறைந்து வரும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இளைய தலைமுறையினரை மதத் தலங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் சௌபாக்கியம் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
