உச்சமடையும் வர்த்தக போர் : அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா

உச்சமடையும் வர்த்தக போர் : அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் திகதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது என சீன வர்த்த அமைச்சு அறிவித்தது. இதை கடுமையாக கண்டித்த அமெரிக்கா, 24 மணி நேரத்தில் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவுக்கு கெடு விதித்தது.

அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலை சீனா நிராகரித்தது. இதையடுத்து, சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் என்றும், பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த வரி உயர்வைக் கண்டித்து சீனா, அமெரிக்கப் பொருட்களுக்கு 84% இறக்குமதி வரியை விதித்தது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125% ஆக உயர்த்தியது. மேலும், வரியை 125% ல் இருந்து 145% ஆகவும் உயர்த்தி ட்ரம்ப் அறிவித்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீனா, அமெரிக்காவுக்குப் போட்டியாக அந்நாட்டு பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது.

“சீனா மீது அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரி உயர்வு, சர்வதேச வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்கள் மற்றும் பொது அறிவை கடுமையாக மீறுவதாக உள்ளது. ட்ரம்ப்பின் வரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய பொருளாதார கொந்தளிப்புக்கு அமெரிக்கா முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தற்போதைய உலகப் பொருளாதாரம், உலக சந்தைகள் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் கடுமையான அதிர்ச்சிகளையும் கடுமையான கொந்தளிப்பையும் சந்திக்க அமெரிக்காவே காரணம்” என்று சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஒருதலைப்பட்ச கொடுமைப்படுத்துதலை எதிர்ப்பதில் பெய்ஜிங்குடன் ஐரோப்பிய ஒன்றியம் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெய்ஜிங்கில் பேசிய அவர், “சீனாவும் ஐரோப்பாவும் தங்கள் சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் ஒருதலைபட்சமான கொடுமைப்படுத்துதல் நடைமுறைகளை கூட்டாக எதிர்க்க வேண்டும். இது சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பாதுகாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Share This