நியூஸிலாந்தை தோற்கடித்து தொடரை தனதாக்கியது இங்கிலாந்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹென்றி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் சதங்களினால் 323 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை தனதாக்கியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்று தொடரில் 1-0 என ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில் தீர்க்கமான இரண்டாவது போட்டி ஐந்தாம் திகதி ஆரம்பித்திருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கேற்ப தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு மத்திய வரிசை வீரரான ஹென்றி புரூக் அதிரடி சதம் கடந்து 123 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க 280 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் ஸ்மித் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் களம் நுழைந்த நியூஸிலாந்து அணிக்கு அதன் நம்பிக்கைக்குறிய துடுப்பாட வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தமையால் வெறும் 125 ஓட்டங்களுக்குள் சுருண்டது. வில்லியம்ஸன் 37 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் அட்கின்சன் ஹெட்ரிக் அடங்களாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 155 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வீரரான ஜோ ரூட் 106 ஓட்டங்களையும், பெத்தல் 96 ஓட்டங்களையும் விரைவாகப் பெற்றுக் கொடுக்க ஆறு விக்கெட்டுகளை இழந்து 427 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. பந்துவீச்சில் சௌதி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 583 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி மூன்றாம் நாளில் களம் நுழைந்த நியூஸிலாந்து அணிக்கு இளம் வீரரான ப்ளூண்டல் ஆறுதல் சதம் அடித்து 115 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும் 259 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 323 ஓட்டங்களால் தோற்றுப் போனது நியூசிலாந்து அணி.
பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை சாய்ந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை நியூசிலாந்தில் வைத்து வெற்றி கொண்டது இங்கிலாந்து.
(அரபாத் பஹர்தீன்)