தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தென் கொரியாவின் யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இராஜதந்திர வழியே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முன்மொழிந்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைப் பிரஜைகள் 5 முதல் 8 மாதங்கள் வரை யொங்க்வோல் பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி கிராமங்களில் வேலை செய்து வருமானம் ஈட்டவும், இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வரவும் முடியும்.
இந்த ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகுதியான தொழிலாளர்களை தெரிவுசெய்து விரைவில் தென் கொரியாவுக்கு அனுப்பும் என, பணியக தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வேலை வாய்ப்பிற்காக வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாம் எனவும், ஏமாற்றப்படாதிருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.