தமிழ் கட்சிகள் விழித்துக்கொள்ளும் வழியை காட்டியுள்ள தேர்தல் முடிவுகள்

வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமாகாணத்தில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆறுமாதங்களே கடந்துள்ள சூழலில் இத்தகைய வீழ்ச்சி என்பது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் தமிழ் மக்கள் திருப்பியடையவில்லை என்பதையே சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் மாநகர சபை பருத்தித்துறை பிரதேச சபை, நல்லூர் பிரதேசசபை, வலி. கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபை என்பவற்றில் இலங்கை தமிழ் அரசு கட்சி முன்னிலை பெற்யுள்ளதுடன், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதுடன் யாழ். மாநகர சபை உட்பட பல சபைகளில் தமிழ் அரசுக் கட்சிக்கு நெருக்கமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி யாழ்.மாவட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று வடமாகாணத்தின் ஐந்து தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிகொண்டிருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்ததில் மக்கள் ஆதரவை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளதுடன், எந்தவொரு சபையையும் கைப்பற்ற முடியாது போயுள்ளது.
வடமாகாணத்தில் ஏனைய தேர்தல் மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பலம் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், பல சபைகளில் தனித்து ஆட்சி அமைக்கும் ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது. ஏனைய சபைகளில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறலாம்.
அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்துக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதுடன், தமிழ் கட்சிகளின் ஒன்றுமை மற்றும் தமிழர்களின் எதிர்கால அரசியல் இலக்குகளை தீர்மானித்துக்கொள்ளும் பாடத்தையும் தேர்தல் முடிவுகள் எடுத்துரைத்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டிருந்த பாரிய பிளவால் முதல் முறையாக பிரதான தேசிய கட்சியொன்று வடக்குகில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சந்தர்ப்பமொன்று உருவாகியிருந்தது. தேசிய கட்சிகளின் ஆதிக்கம் வடக்குகில் அதிகரிப்பது தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்தானது கடும் எச்சரிக்கைகளும் வெளியாகயிருந்தன.
பாரம்பரிய தமிழ் கட்சிகள் மீது ஏற்பட்ட கடும் அதிருப்தியின் வெளிபாடாகதான் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இருந்ததன. அதனால் மீண்டும் தமிழ் கட்சிகளின் எழுச்சி மற்றும் ஒற்றுமையை தமிழ் மக்கள் விரும்புவதாக உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை தமிழ் கட்சிகளின் தலைமைகள் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சு.நிஷாந்தன்