தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூர் அதிகார சபையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தோரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேர்தல் அடைவு நிலை குறித்து ஆராய்ந்ததுடன் கிடைத்த வெற்றிகளை மூலதனமாக கொண்டு அடுத்த கட்டம் நோக்கி முன்னேறிச் செல்வது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உசுப்பேற்றியோ, போலி வாக்குறுதிகளையோ, போதை ஏற்றும் சன்மானங்களையோ வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கவில்லை.

நாம் வழமை போன்றே எமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக கூறி மக்களிடம் சென்றிருந்தோம். அதன் முடிவுகள் வந்துள்ளன. அவை எமக்கு சர்பாக இல்லாவிடினும் கிடைத்தவை தோல்வியிலும் வெற்றிக்கான சமிக்ஞையாகவே இருக்கின்றது.

அதேநேரம் ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பம் எமக்கில்லை.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பியிடம் தேசிய நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பது அறவே இல்லாது போய்விட்டதுடன் அது மறுக்கப்படுள்ளமையால் உள்ளூர் அதிகார சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை நாம் வழங்கப்போவதில்லை.

இதுவே கட்சியின் முடிவாகவும் இருக்கின்றது. அதேநேரம் ஏனைய தமிழ் கட்சிகளுக்கான ஆதரவும் அவர்கள் அதிகரபூர்வமாக கோரும் பட்சத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டே எடுக்கப்படும்.

குறிப்பாக இது கட்சியின் எதிர்காலம் மற்றும் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்.” என்றார்.

Share This