உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓர்,இரு நாட்களில் நீதியை வழங்க முடியாது ; அரசாங்கம் பகீர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர், இரு மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்ட முடியாதென அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு – செலவுத் திட்டம் மீது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர், இரு மாதங்களுக்குள் நீதியை வழங்க முடியாது. அரசாங்கத்தை பொறுப்பேற்ற பின்னர்தான் இதை உணர்ந்தோம். இருப்பினும், இந்த மாதத்தில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் உட்பட எவராலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எங்கள் அரசாங்கத்தின் கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கிறோம். அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் அல்லது ஒரு மாதத்தில் செய்துவிட முடியாது. இது எளிதானதாக இருக்காது. இரண்டு மாதங்களுக்குள் இதுதான் நீதி, இவர்தான் பிரதான சூத்தரதாரி என எங்களால் காட்ட முடியாது. அதற்கு காலம் தேவை.
ஒவ்வொரு வருடமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வேண்டி நீர்கொழும்பில் பேரணியை நடத்தி வருகிறோம். இந்த வருடமும் அந்தப் பேரணி இடம்பெறும். அதில் நானும் கலந்துகொள்வேன். இறுதி தீர்வு கிடைக்கும் வரை நாம் பேரணியை நடத்த வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.