உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: விசாரணைகளை சீர்குலைக்க சூழ்ச்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்கு முற்படும் நபர்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேகர எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்த கருத்து சம்பந்தமாக விசாரணை நடக்கின்றது. அதற்கமைய தெரிவுக்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பதில்களை வழங்கினார். மாறாக அவர் தாமாக முன்வந்து கருத்துகளை வெளிப்படுத்தவில்லை.
இது ஊடகங்களுக்க வெளிப்படுத்திய தகவல் அல்ல.இது விசாரணையின் ஓர் அங்கம். எனவே, தகவல்களை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தால்கூட கட்டளையிட முடியாது என நினைக்கின்றேன்.
எனவே, விசாரணைய சீர்குலைப்பதற்கு முற்படும் தரப்புகளுக்கு இடமளிக்க வேண்டாம்.” எனவும் நீதி அமைச்சர் சபையில் வலியுறுத்தினார்.
அதேவேளை, உயர்பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புடன்தான் அழைக்கப்படுகின்றனர். தெரிவுக்குழுமீது நம்பிக்கை வைத்தே அவர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர். அந்த கருத்துகளை உறுப்பினர்கள் டுவிட் செய்வது தவறு. அவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.