250க்கும் மேற்பட்ட உயிரை பறித்த ஈஸ்டர் தாக்குதல் – யார் இந்த சுரேஷ் சாலே?

250க்கும் மேற்பட்ட உயிரை பறித்த ஈஸ்டர் தாக்குதல் – யார் இந்த சுரேஷ் சாலே?

250க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த 2019 உயிர்த்தா ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (25) காலை பேலியகொட பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழுவினால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடந்த காலத்தில் புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்த சாலே, வெளிநாட்டு உளவுத்துறை தகவல்களைப் புறக்கணித்ததாகவும், தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தாக்குதல்கள் தொடர்பாக சுரேஷ் சாலே மீது முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் வாழ்க்கை பெரும்பாலும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வுப் படையின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றிய அவர், 2016 இல் இராணுவ புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் மலேசியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திலும் பின்னர் இந்தியாவின் புது டில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திலும் பாதுகாப்பு ஆலோசகராக இராஜதந்திர சேவையில் பணியாற்றினார்.

அவரது வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சர்ச்சைக்குரிய நியமனம் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு வந்தது. டிசம்பர் 2019 இல், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவரை அரச புலனாய்வு சேவையின் (SIS) இயக்குநராக நியமித்தார்.

முன்னர் ஒரு சிவில் அதிகாரியின் கீழ் இருந்த இந்த நிறுவனத்தை வழிநடத்த ஒரு இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக அவரது பணி சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் தேவையற்ற செல்வாக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளால் அவரது பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கைகள் கூட, நாட்டில் உள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து செல்வாக்கு செலுத்துவதில் அரச புலனாய்வு சேவையின் பொறுப்பை கேள்விக்குள்ளாக்கின.

கூடுதலாக, 2023 ஆம் ஆண்டு சேனல் 4 வெளியிட்ட சிறப்பு காணொளியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திட்டமிட்டவர்களுடன் சாலேவுக்கு ரகசிய தொடர்புகள் இருந்ததாக தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், சாலே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்ற போதிலும், சர்வதேச அரங்கில் அவரைச் சுற்றியுள்ள சந்தேகம் முற்றிலும் மறைந்துவிடவில்லை.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், குறிப்பாக, அரச புலனாய்வு சேவையின் தலைவராக அவரது பங்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்துவதற்கு ஒரு தடையாக இருப்பதாக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன.

இதன் விளைவாக, சர்வதேச சமூகமும் உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளும் அவரை பதவியில் இருந்து நீக்கி, பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு பல ஆண்டுகளாக அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் சுரேஷ் சாலேவை தனது பதவியை ராஜினாமா செய்யச் வலியுறுத்தியது. அவர் மறுத்ததைத் தொடர்ந்து, ஒக்டோபர் 2024 இல் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த கைது ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்தும் என்று விமர்சகர்கள் நம்புகின்றனர்.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும், இந்த கைது நடவடிக்கையின் மூலம் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பல ரகசியங்கள் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அல்லது ஆதாரங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் சிவில் சமூக அமைப்புகளும் நீண்ட காலமாகக் கோரி வரும் நீதியை அடைவதற்கான தற்போதைய நிர்வாகத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

பல்வேறு விசாரணைக் குழுக்கள் மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு மத்தியில் இழுபறியாகிக் கொண்டிருந்த இந்த வழக்கு, சுரேஷ் சாலேவின் கைதுடன் புதிய முகம் பெறும் என்று நம்பப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )