போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன.
இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்கள் “வன்முறைக்கு ஆளாகாமல்” தடுப்பதற்கும் “பதட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்” இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்த மாகாணத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கூடுதல் பொலிஸ் பிரிவுகளும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் பட்டப்பகலில் நடந்த பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர். மேலும், கடந்த வாரம் நீம்ஸின் புறநகர்ப் பகுதியில் 19 வயது இளைஞனின் உடல் பகுதியளவு எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேயர் ஜீன்-பால் ஃபோர்னியர் அறிவித்துள்ளார்.
நிலைமை “சகிக்க முடியாததாக” மாறிவிட்டது என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் “பயம் மற்றும் பயங்கரவாதத்தின் சூழலை” உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடாத சிறார்களைப் பாதுகாக்கும் என துணை மேயர் ரிச்சர்ட் ஷீவன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கில் 120 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பெஜியர்ஸில், கடந்த ஆண்டு முதல் இரவு 11 மணி முதல் காலை 06 மணி வரை 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகின்றது.
மேலும் கடந்த மார்ச் மாதம் சில பகுதிகளில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஊரடங்கு உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போதிலும் பெஜியர்ஸ் வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்மேற்கு பிரான்சில் உள்ள லிமோஜஸிலும் இதேபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நாட்களில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் நீண்டகாலமாக குழு மோதல்களின் மையமாக இருந்த மார்சேய் நகருக்கு அப்பால் போதைப்பொருள் வன்முறை விரிவடைந்து வருவதை சமீபத்திய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
உள்துறை அமைச்சகத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் போதைப்பொருள் தொடர்பான வன்முறையில் 110 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.