கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2 , 30 000கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் இதனை தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் இளைஞர்களால் நிறைந்துள்ளன எனவும் கல்வியறிவு குறைவாக உள்ளவர்களை போதைப்பொருள் கடத்தலுக்காக பாதாள உலகத்தினர் பயன்படுத்துகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கையில் மொத்தமாக 36 சிறைச்சாலைகள் உள்ள நிலையில் அதில் சுமார் 10 ,500 குற்றவாளிகளை மட்டுமே தடுத்து வைத்திருக்க முடியும், ஆனால் அந்த எண்ணிக்கை இன்று நான்கு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் அங்கு 36,000 குற்றவாளிகளை இன்று தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொலை மற்றும் ஐந்து கிராம் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும், ஆனால் அதனை நிறைவேற்ற முடியாது .

குறிப்பாக இன்று கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2 ,30,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்மாகாணத்தில் இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படும் இளைஞர்கள் என தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் எப்படிச் செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் ,
எங்கு குழுவாக நிற்கின்றார்கள் என்று பார்க்க நிறைய அதிகாரிகளை சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் ஏதேனும் தகவல் இருந்தால் பாடசாலை விட்டுச் செல்லும்போது பஸ் நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் இதுபோன்ற விடயங்களைக் கண்டால் அறிவிக்குமாறு
071 859 2683 எனும் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.

Share This