“என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட்

“என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட்

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயின் தனியுரிமைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் தம்பதிகள் ஆவர்.

முன்னதாக, கோலி தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது அனுமதியின்றி படங்களை எடுக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், அதன ஒரு பகுதியாக விராட் கோலியுடன் குடும்பம் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற அவுஸ்திரேலிய செய்தியாளர்களிடம் விராட் கோலி கோபமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

செய்தியாளர்களின் கேமரா குழந்தைகளை நோக்கி திரும்பியதால் கோலி கோபமடைந்தார்.

இதனையடுத்து, குழந்தைகளுடன் இருக்கும் போது சில தனியுரிமை வேண்டும் என்றும் கேட்காமல் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் கோலி கூறுவது காட்சிகளில் தெளிவாக தெரிகிறது.

விமான நிலையத்திலிருந்து கோலி வெளியே வந்தபோது, ​​அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டிடம் செய்தியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கோலியும் அனுஷ்காவும் வெளியே வந்த பிறகு கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. இதை கவனித்த கோலி கோபமடைந்தார்.

எவ்வாறாயினும், குழந்தைகளை படமெடுக்கவில்லை என்று செய்தியாளர்கள் கூறியதும் கோலி அமைதியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This