
டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமான முறையில் வரி அறவீடு செய்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டிரம்பின் சுங்க வரிகள் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஒன்பது பேர்கொண்ட நீதியரசர் குழாமில் 6 பேர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானது என தீர்மானித்தன் பிரகாரம் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் டிரம்ப் விதித்த பெரும்பாலான அவசர சுங்க வரிகளுக்கு சட்டபூர்வ ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அளவில்லாத, காலவரையற்ற, பரந்த அளவிலான சுங்க வரிகளை ஒருதலைப்பட்சமாக விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும் அதற்கு காங்கிரஸின் தெளிவான அனுமதி அவசியம் எனவும் பிரதம நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டம் அவசரநிலைகளில் சர்வதேச வர்த்தகத்தை ‘ஒழுங்குபடுத்த’ ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கினாலும், ‘வரி விதிப்பு’ குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுங்க வரிகள் விதிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் படி காங்கிரஸுக்கே உரியது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
என்றாலும், ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ள சுமார் 134 பில்லியன் அமெரிக்க டொலர் சுங்க வரியை திருப்பி வழங்க வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கவில்லை.
இந்த விவகாரம் கீழ்நீதிமன்றங்களில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
