இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது.

நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிப்பாடுகள் குறித்த முன்னேற்றங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.

அத்துடன், இன மற்றும் மத அடிப்படையில் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகள், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலைமை, இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் சமரசம் ஆகிய விடயங்கள் குறித்தும் பேசப்படவுள்ளது.

இந்த விவாதம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம், “ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச உரையாடலை உருவாக்குவதே இந்த விவாதத்தின் நோக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசியல் சூழலில் சர்வதேச சமூகத்தின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த நாடாளுமன்ற விவாதம் பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )