ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றாரா வே.இராதாகிருஸ்ணன்?

” 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நான் நிதி பெற்றுக் கொண்டதாக எனது பெயரை பயன்படுத்தி தவறான செய்தி வெளிவந்துள்ளது. இந்த விடயம் என்னுடன் தொடர்புபட்டது அல்ல. எனது பெயரில் உள்ள வேறு ஒரு நபர் பெற்றுக் கொண்ட நிதி தொடர்பிலேயே தவறுதலாக எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்றைய தினம் (06.08.2025) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேட்டகப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் அநுர கருணாதிலக்க பதில் வழங்குகின்ற பொழுது, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து n வளிநாட்டில் கல்வி பயில்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பாக பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட பட்டபட்டியல் ஒன்றில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டது.
இது தவறான ஒரு விடயமாகும். ஏனெனில் அந்த நிதியானது 2006 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.நான் 2006 ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையில் கல்வி அமைச்சராக செயற்பட்டேன்.
அவ்வாறான ஒரு நிலையில் நான் எப்படி நிதியை பெற்றுக் கொண்டிருக்க முடியும்? எனவே இது தொடர்பான தகவல்களை தேடிப்பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் அரசாங்கத்திடம் முன்வைக்கின்றேன். சரியான தகவலை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
எனக்கு தெரிந்த வகையில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கொழும்பை சேர்ந்த பி.இராதாகிருஸ்ணன் என்பவரே. எனவே எனக்கும் அந்த செய்திக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவிக்கின்றேன். எனவே அரசாங்கத்தின் அமைச்சர்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றபோது ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.” – என்றுள்ளது.