ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை – முன்னாள் எம்.பி

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில், வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அதன்பின்னனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கண், காது மற்றும் வயிற்றில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவருக்கு செவிப்புல வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தனது சொந்த சொத்துக்களில் இருந்து 4.5 மில்லியன் ரூபாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிகிச்சைகளுக்காக செலவிட்டதாக மேலும் தெரிவித்தார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300,000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் உரிய முறையில் சரிபார்க்காமல் அமைச்சர் தரவுகளை முன்வைத்திருக்கிறார்.
தேசிய சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது பாரிய குற்றம் மற்றும் மோசடி செயல், இதனால் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் கவனமாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே பணம் ஒதுக்கப்பட்டமை தெரியவந்தது. ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர் கூறுவது போன்று ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றதாக கூறப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும்” என்றார்.