தையிட்டிக்கு விகாரைக்கு அமைச்சர் சந்திரசேகரர் இரகசியமாக சென்றாரா?

தையிட்டிக்கு விகாரைக்கு அமைச்சர் சந்திரசேகரர் இரகசியமாக சென்றாரா?

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில், அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு சென்ற நிலையில் அது பரகசியம் ஆகியுள்ளது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை எவருக்கும் அறிவிக்காது இரகசியமான முறையில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் , தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள் சிலரும் விகாரைக்கு சென்று இருந்தனர்.

இதன்போது அங்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் அங்கு நின்றிருந்தனர். அமைச்சர் குழாம் அங்கு வருகை தருவது தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்காது இரகசியமாக வந்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர்.

இரகசியமான முறையில் விகாரைக்கு சென்று பேச வேண்டிய தேவை ஏன் அமைச்சருக்கு ஏற்பட்டது என சபை உறுப்பினர்கள் தமக்குள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதேவேளை அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சந்திரசேகரர் தெரிவித்தார்.

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற போது அமைச்சரும், மாவட்ட செயலரும் தையிட்டி விகாரைக்கு செல்வது தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This