பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கன்னத்தில் அறைந்தாரா மனைவி?.. விமானத்தில் பரபரப்பு சம்பவம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை அவரது மனைவி பிரிஜிட் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, வியட்நாமின் தலைநகரான ஹனோய் விமான நிலையத்தில் மேக்ரான் தரையிறங்கினார்.
விமானத்தின் கதவு திறக்கப்பட்டபோது மேக்ரான் இறங்குவதற்கு முன், அவரது முகத்தை நோக்கி மனைவி பிரிஜிட் இரண்டு கைகள் நீட்டி தாக்குவதுபோல் பாவனை செய்தது கேமராவில் பதிவானது.
சுதாரித்துக்கொண்ட இருவரும் பின்பு கீழே இறங்கினர். அப்போது மேக்ரான் கைகளை கோர்க முயன்றும் இறுக்கமான முகத்துடன் பிரிஜிட் தனியாக இறங்கினார். இதனால் முன்னதாக வாக்குவாதத்தில் மேக்ரானை பிரிஜிட் தாக்கியதாக ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில் வைரலான இந்த காட்சிகளுக்கு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனை விளக்கமளித்துள்ளது.
விமானத்தில் நடந்தது அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும் அவரது மனைவி பிரிஜிட்டிற்கும் இடையிலான பாசத்தின் வெளிப்பாடே தவிர அது ஒரு வாக்குவாதம் அல்ல என்று எலிசி அரண்மனை தெரிவித்தது.
காணொளியில் உள்ள காட்சிகள் போலியானவை அல்ல என்றும், ஆனால் தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகிறது என்றும் மேக்ரான் விளக்கினார். பிரிஜிட் மேக்ரோனை விட 25 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.