கொழும்புத்துறையில் அபிவிருத்தி – ஆளுநர் அரசாங்கத்துக்கு பாராட்டு

கொழும்புத்துறையில் அபிவிருத்தி – ஆளுநர் அரசாங்கத்துக்கு பாராட்டு

கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைக்கப்படுவதன் ஊடாக இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவது மாத்திரமல்ல இந்தப் பகுதியுமே அழகாக மாறவுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த இந்த அரசாங்கத்தையும் அமைச்சர் சந்திரசேகர் அவர்களையும் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கொழும்புத்துறை இறங்குதுறை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்புத்துறை இறங்குதுறையில் நேற்று வியாழக்கிழமை (18.09.2025) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், அபிவிருத்தி என்பது தனியே பௌதீக முன்னேற்றம் மாத்திரம் அல்ல. அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் மேம்படவேண்டும். இன்றைய முயற்சியும் அவ்வாறானதொன்றே. நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோதும் இந்த இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தேன். ஆனால் அது அப்போது சாத்தியப்பட்டிருக்கவில்லை. இன்றைய அரசாங்கத்தின் காலத்தில் அது சாத்தியமாகியிருக்கின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஓராண்டு காலத்தினுள்ளேயே மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தத் திட்டமும் ஒன்று. இதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு இந்தச் சந்தர்பத்தில் வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழ். நகரத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தினுள் இந்தப் பகுதி இருந்தாலும் அழகான கிராமமாக இருக்கவில்லை. இன்று இந்த இறங்குதுறை புனரமைப்பு என்பது எதிர்காலத்தில் இந்தக் கிராமத்தையும் அழகாக மாற்றும் என்று நம்புகின்றேன்.

இந்த முயற்சிகளை முன்னெடுத்துள்ள அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என்றார்.

CATEGORIES
Share This