நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் – ஆனந்த விஜேபால விசேட உரை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை பறிமுதல் செய்தமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சாட்சியங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு இன்று (19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் இதற்கிடையில் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கையை வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ் மா தேசபந்து தென்னகோனின் வீட்டில் இருந்து 795 மதுபான போத்தல்கள், 214 வயின் மதுபான போத்தல்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரு ஐ போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் மூலம் அநேக தகவல்கள் வெளிப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.