சிறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேசபந்து தென்னகோன்

சிறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேசபந்து தென்னகோன்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்புக்கு தனியான ஒரு சிறைக் காவலரை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமிணீ பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் மூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தேசபந்து தென்னகோன் 10 சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் கண்டி மாவட்டம் தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அருகில் தனியான ஒரு அறையில் தேசபந்து தென்னகோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெற்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் தேசபந்து தென்னகோன் ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்ட அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதை விட பலத்த பாதுகாப்பை தும்பர சிறைச்சாலையில் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் காணப்படும் ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share This