காலி மாவட்ட பெருந்தோட்டங்களுக்கு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விஜயம்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் காலி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான விஜயமொன்றினை கடந்த 31 ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.
இதன்போது காலி மாவட்டத்தின் எல்பிடிய திவித்துறை தமிழ் மகாவித்தியாலயம், தலங்கஹா சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார்.
விசேடமாக காலி மாவட்டத்தில் இரு கல்வி வலயங்களில் உடுகம கல்வி வலயத்தில் சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், தலங்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் எல்பிடிய கல்வி வலயத்தில்; விவேகானந்தா வித்தியாலயம் போன்ற வித்தியாலயங்களில் ஆசிரிய பற்றாக்குறை, உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பித்தல் மற்றும் பாடசாலையில் காணப்படுகின்ற இடப்பற்றாக்குறை தொடர்பாக கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப்பெற்றுக் கொடுப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத் திட்டங்களிலே பொது மக்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனத் தெரிவித்த அவர், விசேடமாக ஆன்மீக துறைசார்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர் அனைவருக்குமே ஒரு பாரிய பொறுப்புள்ளதாகவும் அரசாங்கமும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதால் மாத்திரமே எமது எதிர்கால தலைமுறையை சிறந்த பிரஜைகளாக உருவாக்க முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
தான் விரும்பும் மொழியில் கல்விகற்கும் உரிமை நாட்டில் சகலருக்கும் உள்ளதாக குறிப்பிட்ட பிரதியமைச்சர், பாடசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் மாற்று மொழிகளில் கல்விகற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் இதனால் அதிகமானவர்கள் இடைவிலக நேரிடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
காலி மாவட்டத்தில் பத்தேகம, தலங்கஹா, நாக்கியாதெனிய, எம்மெலிய தோட்டங்களில் வாழும் மக்களோடும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துரையாடினார்.
இதன்போது தாம் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அம்மக்கள் பிரதியமைச்சரிடம் முன்வைத்தனர். இதில் வீடு, வீதி,போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் இங்கு வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகவும் பிரதியமைச்சருக்கு எடுத்துக் கூறினர். இதன்போது எம்மெலிய தனியார் தோட்ட மக்கள் முகங்கொடுக்கின்ற காணி பிரச்சினைகள் தொடர்பாக காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு இவ்விஜயத்தில் பங்கேற்ற காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்த யூ கமகேவிடம் பிரதியமைச்சர் பிரதீப் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் நாக்கியாதெனிய பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததோடு பெருந்தோட்ட அமைச்சினால் காலி தலங்கஹா பிரிவில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்கள் அறநெறி பாடசாலை கட்டடங்கள், ஆலயங்களையும் பிரதியமைச்சர் பார்வையிட்டார்.
