சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு

பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினமும் புதன்கிழமை நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
அமைக்கப்படும் வீதிகளின் தரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அது தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று வேலைத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட வேண்டும். மக்களின் தேவைகளின் அடிப்படையில் வீதித் திருத்தங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
அதேபோன்று, திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு பதிலளிக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. அது தவறான செயற்பாடு. அன்றன்றே கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
அத்துடன் திணைக்களத் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களின் கீழான விவரங்கள் தொடர்பில் விரல் நுனியில் தரவுகளை வைத்திருக்க வேண்டும். திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் தங்கள் சேவைகளை ஆற்ற வேண்டும்.
எமது மாகாணத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியின் எதிர்பார்ப்பும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதே, அதனை விடுத்து கட்டடங்கள் கட்டுவதாலோ அல்லது வீதிகள் அமைப்பதாலோ மாத்திரம் பயனில்லை.
உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். அத்துடன் சோலை வரி மீளாய்வை அனைத்துச் சபைகளும் செய்து முடிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.