மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி வலுக்கும் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி வலுக்கும் கோரிக்கை

எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது. தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தடை வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றோம்.” இவ்வாறு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் எனப் பல தரப்பினரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா போன்றோர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியிறுத்தியுள்ளனர்.

இவர்களை விட தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் குழுவொன்றும் “மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும்” என்று கேட்டுள்ளது. இவர்களோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத், முன்னாள் அமைச்சரான புத்திக்க பத்திரன போன்றோரும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளனர். இவற்றோடு தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தும் வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தரப்புகள் என்பது கவனத்திற்குரியது.

மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளுநர்கள் தன்னிச்சையாகச் செலவு செய்கின்றனர் என்று இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது தயாசிறி ஜெயசேகர வெளிப்படையாகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கும்போது, “ஆளுநர்கள் தற்போது தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதுடன் தங்களது விருப்பத்தின் பிரகாரம் மாகாண சபைகளின் நிதியை செலவிடுகிறார்கள். உதாரணமாக, வடமேல் மாகாண ஆளுநர், உகந்த மேற்பார்வையின்றி 300 கோடி ரூபாவை செலவிட்டிருக்கிறார். ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகத் தெரிகிறது. அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட விடயதானமாக கல்வி இருப்பதால் பாடசாலைகளை மூடுவது போன்ற தீர்மானங்களை ஒருதலைப்பட்சமாக எடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய தயாசிறி, தேர்தல்களை உடனடியாக நடத்தி மாகாண சபைகளை இயங்கவைத்தால் அவை பிராந்தியப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய களமாக அமையும்“ என்று கூறினார்.

இதேவேளை இந்தியா, கனடா, மலாவி போன்ற நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. அரசாங்கமும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என்பதால் அநேகமாக அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறக் கூடும். “தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது. இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும். தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்” என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்திருக்கிறார். இதே கருத்தை அமைச்சர் பிமல் ரத்னாயக்கவும் கூறியிருக்கிறார். “நாடாளுமன்றத்தில் ஒரு எளிமையான திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியும் அல்லது எல்லை நிர்ணயத்தை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் மூலம் புதிய முறையின் கீழ் அந்தத் தேர்தல்களை நடத்த முடியும்“ என்று தயாசிறி ஜெயசேகரா தெரிவித்திருக்கிறார்.

ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு பலமான அபிப்பிராயம் அல்லது அழுத்தம் பொதுவாகவே உருவாகியுள்ளது. இவ்வளவு காலமும் மாகாண சபைகளைப் பற்றியும் அவற்றுக்கான தேர்தலைப் பற்றியும் தமிழ் அரசியற் கட்சிகளும் தமிழ் பொது அமைப்புகள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகளும்தான் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்துடன் மாகாண சபைகளுக்கான அதிகாரம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதிலிருந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி, அதிகாரப் பகிர்வை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி வந்தனர். இப்பொழுது தென்னிலங்கையிலிருந்தும் மாகாண சபைக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. இது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

ஆனால், இது தொடர்பாக இதுவரையில் முஸ்லிம் கட்சிகளிடமிருந்தும் முஸ்லிம் சமூகத்திடமிருந்தும் முறையான கருத்துகள் எவையும் வந்ததாகத் தெரியவில்லை. மாகாண சபைகளில் முஸ்லிம்கள் பங்கேற்றிருந்தாலும் கிழக்கில் ஆட்சியை அமைத்திருந்தாலும் மாகாண சபைகளைக் குறித்த ஆர்வம் அவர்களிடம் பெரிதாக இல்லை. இதொரு பாதகமான அம்சமாகும்.

மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்குரிய தீர்வோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தக் கூடியதோ அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் இதுவரையான முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அதிகாரப் பகிர்வு மாகாண சபையாகவே உள்ளது.

இப்படியிருக்கின்ற போதும் 2017 ஆம் ஆண்டில் மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பிறகு மூன்று ஆட்சிகளையும் இலங்கை நான்கு ஜனாதிபதிகளையும் கண்டிருக்கிறது. தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்குரிய பொறுப்பை கடந்த அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளும் கூட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீதமான ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்திற்குள் மாகாண சபை தேர்தல் முறையை மாற்றும் நோக்கில் இடைச் சொருகல் செய்யப்பட்ட சில பிரிவுகள் காரணமாகவே தேர்தல்களை நடத்த முடியாமல் உள்ளது. உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டதை விடவும் வேறுபட்ட சட்டமூலமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலை நடத்துவதில் தேர்தல் திணைக்களத்திற்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

இந்தச் சூழலை ”தற்போது உள்ளூராட்சி தேர்தல்களில் கடைப்பிடிக்கப்படுவதைப் போன்று (விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய) கலப்பு முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக எல்லை நிர்ணயக்குழு சமர்ப்பித்த அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்த காரணத்தினாலேயே இன்று வரை தேர்தல்களை நடத்த முடியாமல் இருக்கிறது. புதியதொரு எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீரித்தால் மாத்திரமே தேர்தல்களை நடத்தக்கூடியதாக இருக்கும். அதனால் அவ்வாறு செய்வது மீண்டும் தாமதத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதனால், முன்னையதைப் போன்றே முழுமையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே தற்போதைக்கு நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவந்த திருத்தச் சட்டமூலத்தை அன்று நாடாளுமன்றம் நிறைவேற்றியிருந்தால் மாகாண சபை தேர்தல்களை ஏற்கனவே நடத்தக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்த காரணத்தினால் தனது பதவிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் சுமந்திரனின் சட்டமூலம் நிறைவேறுவதற்கு இருந்த வாய்ப்பை விக்கிரமசிங்க குழப்பியடித்தார்” என்று விமர்சிக்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீ. தனபாலசிங்கம்.

மாகாணசபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது எப்போதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாகாண சபைகளை இயங்க வைக்க வேண்டும் என்ற கூட்டுக் குரல் இப்பொழுதுதான் ஒலிக்கிறது. இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

ஆட்சியிலிருக்கும் மக்கள் தேசிய சக்தி அரசாங்கத்துக்கும் இது வாய்ப்பானது. மாகாண சபை முறையை எதிர்ப்புகளின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தலாம். அதுமட்டுமல்ல, அதற்கான அதிகாரத்தை முழுமையாக வழங்கலாம். அதற்கு அப்பாலும் (13+) செல்லலாம். அதற்கான களச் சூழல் உருவாகியுள்ளது. அல்லது காலம் கனிந்துள்ளது. இங்கே அவர்களுக்கு உள்ள பிரச்சினை என்னவென்றால், மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், அது புலிகளை நிராகரித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ்வை அங்கீகரித்ததாகி விடும் என்ற ஒரு அச்சம் அவர்களுக்குத் தயக்கத்தை உண்டாக்குகிறது. ஏனென்றால், 1987 இல் விடுதலைப் புலிகள் மாகாணசபை முறைமையை எதிர்த்தபோது ஈ.பி.ஆர்.எல்.எவ்தான் அதை ஆதரித்து, முதலாவது மாகாணசபைத் தேர்தலை வடக்குக் கிழக்கில் எதிர்கொண்டது. அதற்காக அது அன்று பெரிய விலைகளையும் கொடுத்தது. அந்த விலைகொடுப்பு இன்னமும் முடியவில்லை. அன்று மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழ் அரசியலில் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடம் விடுதலைப்புலிகள் விடுத்திருந்தனர். அத்தோடு மாகாணசபை இயங்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக 1990 இல் ஈரோஸ் இயக்கத்தின் ஆதரவையும் புலிகள் பெற்றிருந்தனர்.

ஏறக்குறைய இதேபோன்ற ஒரு நிலைதான் தெற்கிலும் நிலவியது. அங்கே இன்றைய மக்கள் தேசிய சக்தியின் தாயான அன்றைய ஜே.வி.பி உள்ளிட்ட சிங்களச் சக்திகள் மாகாண சபையையும் இலங்கை இந்திய உடன்படிக்கையையும் எதிர்த்தன. ஆனால், காலப்போக்கில் ஜே.வி.பியே மாகாண சபைகளில் போட்டியிட்டது.

இத்தகைய கசப்பான வரலாற்றோடுதான் இன்னமும் மாகாணசபை முறைமை உள்ளது. ஆனால், அதை விட்டாலும் வேறு தீர்வோ, அதிகாரப் பகிர்வுக்கான உடனடி ஏற்பாடோ இல்லை.

இந்த நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு வாய்ப்பாக கனிந்திருக்கும் இந்த நல்வாய்ப்பை – மாகாணசபை தேர்தலை நடத்துதல், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதை – தாமதிக்காமல் செய்ய வேண்டும். மக்கள் தேசிய சக்தயிடம் தமது அதிகாரத்தை இழந்திருக்கும் தென்னிலங்கைச் சக்திகள் மாகாணசபை மூலம் தமது இருப்பைத் தக்க வைக்க முயற்சிக்கின்றன. அதற்காக அவை மாகாணசபைத் தேர்தலையும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களையும் அரசாங்கத்திடம் கோரும். அரசாங்கத்துக்கு முடிந்த வரையில் அழுத்தம் கொடுக்கும். அது தமிழ் பேசும் மக்களுக்கும் நல்லதொரு வாய்ப்பைத் தரும்.

 

Share This