இனப்படுகொலையின் இரத்தக் கறையை ‘கிளீன்’ செய்ய வடக்கிலிருந்து கோரிக்கை
யுத்தத்தால் அரசாங்கத்தின் கைகளில் இரத்தக் கறை படிந்திருப்பதாக வலியுறுத்தியுள்ள வடக்கின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை அந்த கறைகளை போக்குவதற்காகவும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஸ்ரீலங்காவினுடைய அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பிலான உரையாடலை இந்த நாட்டில் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற புதிய ஒரு செயற்றிட்டத்தை இந்த அரசு இந்த நாட்டிலே செயற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அரசின் கைகள் முழுமையாக இனப்படுகொலையின் காரணமான, ஒரு இனத்தின் மீது வலிந்து திணித்த அந்த போரின் காரணமாக, இரக்கத் கறை படிந்திருக்கிறது. அதனை அந்த அரசு சுத்தம் செய்வதற்கு முன்வர வேண்டுமென இந்த மாணவர் சமூகமாக நாங்கள் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.”
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் மக்கள் மனதில் உள்ள வடுக்கள் மற்றும் ரணங்களைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ். சிவகஜன்.
“கிளீன் ஸ்ரீலங்கா எனப்படுவது தனியே சுத்தம், சுகாதாரம், தெருக்களை சுத்தப்படுத்துகிறோம் என்பதில் மாத்திரம் இந்த அரசின் இலக்குகள் அமைந்துவிடக்கூடாது. அது எப்பொழுதுமே மக்களின் மனங்களில் உள்ள ஆதார வடுக்களை, ரணங்களை தனிப்பதாகவே இருக்க வேண்டும். அதுவும் இந்த நாட்டை தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு செயல்தான்.”
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளையும் விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள மனுவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கையொப்பத்தைப் பெற்று அதனை போராளிகளின் நலன்புரிச் சங்கத்திடம் கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிரான சட்டமென உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறும், அந்த சட்டத்தை முழுயைாக நீக்கக் கோரியும் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராளிகள் நலன்புரிச் சங்கம் முன்னெடுக்கும் கையெழுத்துப் பிரச்சாரத்துடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இனப்படுகொலை என்ற போர்க்குற்றத்திற்கு இந்த அரசே பொறுப்பு எனக் குற்றம் சாட்டிய மாணவர் சங்கத் தலைவர், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனங்களில் உள்ள கவலையை போக்க அரசும் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
“இந்த மக்களின் மனங்களிலேயே கண்ணீரும், கவலைகளும் தேங்கி மக்களின் மனதிலும் அழுக்கு படிந்துள்ளது. அதனையும் சுத்தம் செய்வதற்கு இந்த அரசு முன்வர வேண்டும். இந்த அரசின் மீது படிந்துள்ள இனப்படுகொலை போர்க்குற்றத்திற்கு இந்த அரசு பொறுப்புச்சொல்ல வேண்டும்.”
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்று திரட்டும் வகையில், கிராமங்கள் வரை கிளீன் ஸ்ரீலங்கா சபைகளை அமைக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
“இந்த திட்டம் எப்போது முடிவடையும்? இது நிறைவடையும் திட்டமல்ல. இது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் உலகின் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் தன்மை மாற்றிக் கொண்டு அரசை மாற்றியமைக்கும் ஒரு வேலைத்திட்டம். இது ஓரிரு வருட திட்டம் அல்ல. இது ஒரு திட்டமாக இருந்தால், அது ஒரே இடத்தில் முடிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.”
புதிய இலங்கை தேசத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக தனியான நிதியத்தை நிறுவுவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்