மிக முக்கிய வழக்குகளில் தாமதம்: ஜனாதிபதியை சந்திக்கின்றார் சட்டமா அதிபர்
குற்றவியல் வழக்குகளில், விசாரணைகளை முழுமையாக முடிக்காமல், வழக்குப் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை பொலிஸார் அனுப்பும் போது, கோப்புகளைத் திறக்கவோ அல்லது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்கவோ சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
வழக்குத் தொடரப்படாததற்கான குற்றச்சாட்டுகளின் பின்னணியில், குறிப்பாக உயர்மட்டங்களுக்கு எதிரான முறைப்பாடுகளில், சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், பொலிஸ் விசாரணைகள் முழுமையாக முடிக்கப்படாததே என்று சட்டமா அதிபர் திணைக்கள் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நாளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்க உள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தைக் குறிக்கும் நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி, வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.
“சட்டமா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகளாக ஒரு கோப்பைப் பூட்டி வைத்திருப்பது நம்பமுடியாதது. அதேபோல், சில கோப்புகள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து அவை மோசமடையும் வரை தொடப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று ஜனாதிபதி கூறினார்.
இந்நிலையில், பல உயர்மட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளதாக அறியப்படுகிறது.
2015 பிணை முறிப் பத்திரம் ஏலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட முக்கிய ஏழு வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.