பலஸ்தீனை அங்கீகரிக்கும் கனடாவுடன் ஒப்பந்தம் கடினம் – அமெரிக்க ஜனாதிபதி

பலஸ்தீனை அங்கீகரிக்கும் கனடாவுடன் ஒப்பந்தம் கடினம் – அமெரிக்க ஜனாதிபதி

பலஸ்தீனை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரம்ப் தமது சமூக ஊடக தளமான ட்ரூத்தில் ‘பலஸ்தீனத்தின் தனிநாடு அந்தஸ்தை ஆதரிப்பதாக கனடா அறிவித்துள்ளது. அது அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை எங்களுக்கு மிகவும் கடினமாக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகள் மீது இன்று முதல் அதிக வரிகள் விதிக்கப்படவிருக்கிறது.

இந்த வரி விகிதம் நடைமுறைக்கு வரவிருக்கும் சூழலில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த கனடாவும் அமெரிக்காவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இப்பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் அமெரிக்க−-மெக்சிகோ- − கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத அனைத்து கனேடிய பொருட்களுக்கும் 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்

ட்ரம்ப் நிர்வாகத்துடனான வரி பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளன. ஆனால் குறித்த காலக்கெடுவிற்குள் பேச்சுவார்த்தை முடிவடையாமல் போகலாம் என்று கனடா பிரதமர் கூறியுள்ளார்.

Share This